
ரஜினியோட மாபெரும் வெற்றி திரைப்படமான “அண்ணாமலை” வெளியாகி இன்றோடு 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் #33YearsAnnamalai என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

முதலில் கேளடி கண்மணி டைரக்டர் வசந்த், அண்ணாமலை படத்தை டைரக்ட் பண்ண கமிட் ஆகி ரஜினி தன்னை டாமினேட் பண்ணுவாருன்னு நெனச்சு விலகிட்ட சூழலில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு ஆகியோர் நடிச்சு வெளியான திரைப்படம் தான் இந்த அண்ணாமலை படம். 1992-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். ரஜினியின் மற்ற படங்களை விடவும் “அண்ணாமலை” படத்துக்கு தனி சிறப்பு ஒன்று உண்டு. திரையில் ரஜினி பெயர் வரும்போது அண்ணாமலை தீம் மியூசிக்தான் பின்னாளில் பயன்படுத்தப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.
அப்போதெல்லாம் ரஜினிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டிருந்த காலம். அண்ணாமலை போஸ்டரை நான் எங்கும் பார்கக்கூடாது என கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டதாக வெளியான தகவல்களால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் உண்மையா என்று தெரியாது.
ஆனாலும் இந்த படம் தமிழில் மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாள் ஓடிய முதல் படம் என்று கூறப்படுகிறது. 18 திரையரங்குகளில் 120 நாள் ஓடி சாதனைப் படைத்தது இந்தப்படம். மும்பையில் உள்ள பிரபலமான அரோரா தியேட்டர் உட்பட, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் அதுவரை கேள்விப்படாத ஒரு சாதனையை ’அண்ணாமலை திரைப்படம் பெற்றது.
கதை சுருக்கம்
அண்ணாமலை (ரஜினிகாந்த்) ஒரு ஏழை பால் வியாபாரி. அசோக் (சரத்பாபு) ஒரு பெரிய ஹோட்டல் அதிபரின் மகன். இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஆனால் அசோக்கின் தந்தை கங்காதரன் (ராதாரவி), ஒரு ஏழைப் பால் வியாபாரியுடன் தன் மகன் நட்பு கொள்வதை விரும்பவில்லை. அவர் இருவருக்கும் இடையே பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில், அண்ணாமலையின் வீட்டை அசோக்கின் தந்தை சூழ்ச்சியால் கைப்பற்றி, அதனை இடித்து ஹோட்டல் கட்டத் திட்டமிடுகிறார். இதனால் கோபமடையும் அண்ணாமலை, தன் நண்பன் அசோக்குடன் மோதி, அதே இடத்தில் ஒரு பெரிய ஹோட்டலை கட்டி, அவரை விடப் பெரிய பணக்காரனாக மாறுவேன் என்று சபதம் செய்கிறார். அதன்பிறகு, அண்ணாமலை கடும் உழைப்பால் வெற்றிகரமான தொழிலதிபராக மாறி, அசோக்கின் ஹோட்டலை விடப் பெரிய ஹோட்டலைக் கட்டி தன் சபதத்தை நிறைவேற்றுகிறார். படம் நண்பர்களுக்கு இடையிலான போட்டி, துரோகம் மற்றும் வெற்றியைச் சுற்றி நகர்கிறது.
அந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் வசனங்களும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.